Friday, November 20, 2015

விந்தை மனிதரே!!!


வெந்ததைத் தின்று - நித்தம்
வேதனைச் சுழலில் சுழன்று
வேடிக்கையாய்
வினோத  செயல்கள் செய்து
சுயநலமாய்
சுருங்கிய உள்ளம் கொண்டு
படைத்தவனுக்கே
பணத்தை காணிக்கையாக்கி
வரங்கள் பல  கேட்கும்
விளங்காத விந்தை மனிதரே!!!

உம்மிடம், தெய்வம் பேச நினைத்தால்
இப்படித்தான் இருக்குமோ???

இருக்கையில் கொடுத்திடு - பிறரை
கெடுப்பதை மறந்திடு
இறக்கையில் வந்திடும்
கொடுத்ததும் கெடுத்ததும்!!!
இதுவே உண்மை -- அதை
உணர்வது மேன்மை!



Wednesday, July 29, 2015

தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!




வங்காளக் கரையோரம் நீ பிறந்தாய் -- ஐயா
வறுமையிலும் வாடாமல் நீ வளர்ந்தாய்!

அக்னிச்சிறகுகள் நீ படைத்தாய் -- ஐயா
அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாய்!

கனவுகள் பல காண நீ அழைத்தாய் -- ஐயா
இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைத்தாய்!

தூங்கிய இந்தியாவை தூக்கிவிட்டாய் -- ஐயா
தூங்கவிடா கனவுகளை காண வைத்தாய்!

பொக்ரானில் அணுகுண்டு நீ வெடித்தாய் -- ஐயா
பாரினில் இந்தியாவை மதிக்க வைத்தாய்!

ஏவுகணை  எய்திடவே தினம் உழைத்தாய் -- ஐயா
எதிரிகளை அதனாலே அடக்கி வைத்தாய்!

என்றுமே எளிமையாய் நீ இருந்தாய் -- ஐயா
எல்லார்க்கும் வழிகாட்டி நீ நடந்தாய்!

விருதுகள் வாங்கி நீ குவித்தாய் -- ஐயா
விளம்பரம் அதைத்தானே நீ தவிர்த்தாய்!

தமிழாலே அமுதுகள் நீ படைத்தாய் -- ஐயா
தன்மானம் பெரிதென்றே  நீ நினைத்தாய்!

ஆசானாய் இருக்கவே ஆசைப்பட்டாய் -- ஐயா
அரங்கத்தில் பேசியே மூச்சை விட்டாய்!

தள்ளாத வயதிலும் ஓய்வறியாய் -- ஐயா
தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!