Friday, December 31, 2010

புத்தாண்டே வருக!!!




புத்தாண்டில் புன்னகை பூத்து,
புது விடியல் பல வண்ணங்கள் காட்ட,
சோதனைகள் சாதனைகளாகி,
வேதனைகள் வெற்றிகளாக,
மண்ணுலகம் வளம் கொழித்து,
மகிழ்ச்சியால் உள்ளம் துள்ள,
மானிடரிடம் வேண்டுவதெல்லாம்,

ஏழ்மையிலும் உயர்ந்த நேர்மை!
செல்வச்செழிப்பிலும் போற்றும் எளிமை!
வெறுமையிலும் நிறைந்த வளமை!
வறுமையிலும் செழிக்கும் செழுமை!
செயலினிலெ என்றும் செரிவு!
துன்பதிலே உறுதியான துணிவு!
பதவியிலே பண்பான பணிவு-பயனற்ற
பழமைக்கு கொடுப்போம் முடிவு!

காலந்தின்னும் பழமையே வழி விடுக!!!
கனவைத் தாங்கிய புத்தாண்டே வருக! வருக!!!

Thursday, September 23, 2010

பெண் மானும் கவி நானும்!!!


பறவைகள் பாட்டுப் பாடும்
மாலை நேரம்;
தென்றல் வந்து வீசும் நேரம்
இந்த நேரம்;
தேனிசையில் நடைபோடும்
பெண் மானும்-
பெண் மான் பின் செல்லும்
கவி நானும்;

குயிலோசை இனிது என்றேன்,
குயில் எப்படி இருக்கும் என்றாள்;
மைபூசிய கருமை நிறம்- இது நான்
ஆக குக்கூ என கூவுவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
கரையும் காகமும் கருப்பு என்றேன்,
ஆக காகா என கரைவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
நீள கூந்தலும் கருப்பு என்றேன்;
ஆக நீளமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
திடமான கருங்கல்லும் கருப்பு என்றேன்;
ஆக திடமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
உருவத்தில் பெரிய யானையும் கருப்பு என்றேன்;
ஆக பெரியதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
எரியக்கூடிய நிலக்கரியும் கருப்பு என்றேன்;
ஆக எரிவதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
மழை தரும் கருமுகிலும் கருப்பு என்றேன்;
ஆக மழை கருப்பா என்றாள்;

இல்லை,
வட்டக் கண்ணின் கருமணி கருப்பு என்றேன்;
ஆக வட்டமானதெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
தொடமுடியாத நிழலும் கருப்பு என்றேன்;
ஆக தொடமுடியாததெல்லாம் கருப்பா என்றாள்;

இல்லை,
வெளிச்சமற்ற இருட்டும் கருப்பு என்றேன்;
வெளிச்சம் என்பது என்ன? என்றாள்;
பிரகாசமான ஒளி என்றேன்;
ஒளி என்பது என்ன? என்றாள்;
விவரிக்க தெரியவில்லை என்றேன்;

வாயின் முத்துக்கள் சிதற
நான் பார்வையற்ற குருடு- நீ
பார்வையிருந்தும் குருடா என நகைத்தாள்!!

ஆம் குருடன் தான்-அவளின்
ஊமை விழிகளுக்கு விளக்கமுடியா
அறிவுக் குருடன்!!!

Wednesday, September 22, 2010

கங்கையும் ஓடியதென்ன!!!




கள்ளி காட்டுக்குள்ளே கலங்காம நின்னவளே;
சுடும் காட்டுக்குள்ளே அஞ்சாம போனவளே;
கொண்டவன் சொன்ன ஒரு சொல்லில்
மனம் வெறுத்ததென்ன;
கங்கையும் இமை உடைத்து ஓடியதென்ன;

Thursday, September 2, 2010

மனம் வாடுதே; மதி மயங்குதே;



விழி மூடினேன் உறங்க எண்ணி;
இமை மறுத்ததே தூக்கம் தள்ளி;
நடுக்காட்டிலே துணைகள் இன்றி;
தனிமனிதனாய் வழிகள் தேடி;
புது விடியலை எனக்குள் காண
மனம் வாடுதே; மதி மயங்குதே;

முத்தென நீர்த்துளி வழிய,
சட்டென துக்கம் நிறைக்க,
கண்ணீர் குளத்தில் மிதக்கும்
எண்ணப் படகில் மூழ்கி,
முத்தெடுக்க துடிக்கிறேன்;
இளைய ரத்தம் எனது ரத்தம்,
இடி முழக்கம் எனது சத்தம் என,
என்னை நானே தேற்றுகிறேன்;

Thursday, July 22, 2010

மங்கை இளமயிலே!!!



நெஞ்சிலே இனிப்பதென்ன மங்கை இளமயிலே!
நினைவுகளோ கனவுகளோ மங்கை இளமயிலே!
கண்டவுடன் காதல் கொண்டேன் மங்கை இளமயிலே!
பார்வைக்காக ஏங்கி நின்றேன் மங்கை இளமயிலே!

மந்திரமோ தந்திரமோ மங்கை இளமயிலே!
காந்தமாக என்னை ஈர்த்தாய் மங்கை இளமயிலே!
மன்னாதி மன்னனுக்கு மங்கை இளமயிலே!
மாசற்ற பெண்ணா நீயும் மங்கை இளமயிலே!

கள்வர்கள் நிறைய உண்டு மங்கை இளமயிலே-உன்
அங்கமெல்லாம் புதயலடி மங்கை இளமயிலே!
அழகெல்லாம் கூடுதடி மங்கை இளமயிலே!
பெண்மை உந்தன் நாணத்தாலே மங்கை இளமயிலே!

அலை கூந்தல் ஏன் வளர்த்தாய் மங்கை இளமயிலே!
காளையரை அடிப்பதற்கோ மங்கை இளமயிலே!
வில்லான கண்களவும் மங்கை இளமயிலே!
காதல் அன்பை எய்வதற்கோ மங்கை இளமயிலே!

காதினிலே காதணிகள் மங்கை இளமயிலே!
காற்றில் ஆடும் கொடிகள்தானோ மங்கை இளமயிலே!
கன்னங்கள் ஒவ்வொன்றும் மங்கை இளமயிலே!
அமுது வழியும் கிண்ணங்களோ மங்கை இளமயிலே!

பச்சரிசிப் பற்களடி மங்கை இளமயிலே!
வாயிலுள்ள முத்துக்களோ மங்கை இளமயிலே!
தாம்பூலம் ஏதுமின்றி மங்கை இளமயிலே!
சிவந்த நாக்கு அதிசயமோ மங்கை இளமயிலே!

முல்லைக்குத் தேர் கொடுத்தான் மங்கை இளமயிலே!
பாரி அன்று கொடையாக மங்கை இளமயிலே!
கொடியாடும் இடையழகே மங்கை இளமயிலே!
கொடையாக உன்னைத் தருவாய் மங்கை இளமயிலே!

அன்னம் போல் நடை நடந்து மங்கை இளமயிலே!
இதயத்தில் ஏறிவிட்டாய் மங்கை இளமயிலே!
உனக்காக ஏங்கும் என்னை மங்கை இளமயிலே!
நெஞ்சணையில் உறங்க வைப்பாய்மங்கை இளமயிலே!

கண்ணடி கூடாதென்பர் மங்கை இளமயிலே!
உன் கண்ணடியில் வீழ்ந்துவிட்டேன் மங்கை இளமயிலே!
நோய் என்னை அழிக்கும் முன்பு மங்கை இளமயிலே!
காதல் மருந்து தருவாய் நீயும் மங்கை இளமயிலே!

Sunday, June 13, 2010

நீ - நான்



மண்ணில் ஒரு விதை
நெஞ்சில் உன் முகமே கவிதை;
உன்னோடு நான்- உன்
உணர்வோடு நான்;
கடலாக உன்னில்-என்றும்
அலையாக நான்;
காற்றாக நீ - உன்
மூச்சாக நான்;
உணர்வெல்லாம் நீ-வெறும்
உடல் மட்டும் நான்;
தாயாக நீ -உன்
சேயாக நான்;
சாயாமலே என்றும்- உன்
நினைவிலே நான்.

Wednesday, June 9, 2010

கனவுக்கு இல்லை வேலி!!!






இரவென்றால் ஒரு விடியலுண்டு-அந்த
விடியலை நோக்கி நடைபோடு;
விட்டில் பூச்சியைப் போலன்றி -வாழ்வில்
சாதனை படைக்க முழக்கமிடு;
கார்முகில் உந்தன் பக்கம் வரும் -நீ
ஆணையிட்டால் அது மழை கொட்டும்;
எல்லாம் இன்று கனவுகளே!-நாளை
நிஜமாகும் உன் புத்தியிலே!

கணக்காய் இருந்தால் மானிடனே-என்றும்
பிணக்கே வராது வாழ்வினிலே;
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு-இந்த
மூன்றையும் என்றும் அசைபோடு;
உழைப்பு உழைப்பு என்று மட்டும் -நீ
உழைத்திடுவாயே வாழும் மட்டும்;
உலகம் உன்னைப் புகழுமட்டும்-உன்
ஆன்மா உலகைச் சுற்றி வரும்!

இமயம் என்பது சிறியதுதான் -அது
தூசு என்றல் ரொம்ப சிறியதுதான்;
இமயம் போல் வரும் துன்பங்களே -அதை
கரைத்திடுவாய் உன் முயற்சியிலே;
சாதனை படைக்க வரம்பில்லை -அந்த
விண்ணும் நமது எல்லையில்லை;
கடலுக்கும் உண்டு முடிவுகளே! -நம்
கனவுக்கு இல்லை வேலிகளே!



Monday, June 7, 2010

தாய்


தாய்:

பல நாட்கள் தவமிருந்து,
பத்து மாதம் சுமந்திருந்து,
என்னை பெற்ற
ஒப்பாரும் மிக்காரும் இல்லா
ஒரே ஜீவனை யாரென்பேன்-அவர்
என் தாய் என்பேன்

Friday, June 4, 2010

பெண்ணென பிறந்ததென்ன!



பொன்னிருக்க மணியிருக்க,
ஆழ்கடல் முத்திருக்க;
பூவிருக்க நிலவிருக்க,
ஓயாத அலையிருக்க;
பெண்ணென பிறந்ததென்ன!
ஆழ்மனம் கொண்ட மர்மமென்ன!

கள்ளிப்பால் நெல்மணி என,
காலன்தான் உருமாறிவர;
காலனுக்கு காலனாகி,
கரிகாலன் வாழ்ந்த மண்ணில்
வாழ்க்கை கணக்கை தொடங்கியதென்ன!
வாயைக்கொண்டு பிழைத்ததென்ன!

வாழைத்தண்டு கால்கள் ஆட,
மழலை மொழி பாட்டுப்பாட,
குறுகிய காலமென்ன!
குத்தகைக்கு எடுத்ததென்ன!

கட்டுபாடுகள் திடமாக,
கல்வி கற்க போராட,
கடுகுக்குள் காரமாக,
விதைக்குள் மரமாக,
பூத்த பருவமென்ன!
பெண்மையை உணர்ந்ததென்ன!

மாற்றி நடும் நாற்றாக;
பெரியோர் சொன்ன கூற்றாக;
புதியவனை மனந்ததென்ன!
புது வாழ்க்கை கண்டதென்ன!

புது சொந்தம் புது வசந்தம்;
நன்கு துடைக்கும் புது துடைப்பம்;
புகுந்தவீட்டு சொந்தமென்ன!
அரவணைக்கும் பாங்கென்ன!

வாழையடி வாழையென,
குடும்பம்தான் தழைத்தோங்க;
குழந்தைச் செல்வம் கொண்டதென்ன!
பிறவிப் பயன் அடைந்ததென்ன!

கொள்ளுப்பேரன் பேத்தியென,
சொந்தங்கள் நீண்டதென்ன!
கொள்ளுப்பாட்டி ஆனபோதும்
குழந்தை மனம் கொண்டதென்ன!

உலக அதிசயங்கள் ஏழுதானே-அதில்
எட்டாவதும் நீதானே!
உயிரற்ற அதிசயங்களில்,
உயிருள்ள அதிசயமாய்
பூவுலகில் பிறப்பதென்ன!-மனித
பிறவியை இயக்குவதென்ன!

Wednesday, June 2, 2010

டும் டும் டும் டும்



வெள்ளச் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும் டும்

நீள வானம் சுருங்கிப் போச்சு டும் டும் டும் டும்

வீசும் காற்று கையில்லாச்சு டும் டும் டும் டும்

சுற்றும் பூமி நின்னுபோச்சு டும் டும் டும் டும்

கடலின் ஆழம் தூர்ந்து போச்சு டும் டும் டும் டும்

குட்டையென கடலும் ஆச்சு டும் டும் டும் டும்

கோள்களெல்லாம் வீடுகளாச்சு டும் டும் டும் டும்

அண்டமெல்லாம் கடைகளாச்சு டும் டும் டும் டும்

மேகமெல்லாம் ஆவியாச்சு டும் டும் டும் டும்

ஓவியமும் உயிராச்சு டும் டும் டும் டும்

பச்சைப் புடலை பம்பாச்சு டும் டும் டும் டும்

பாம்பு கூட நடக்கலாச்சு டும் டும் டும் டும்

பதரெல்லாம் உணவாச்சு டும் டும் டும் டும்

உணவெல்லாம் விஷமாச்சு டும் டும் டும் டும்

கருப்பு காக்கா குயிலாச்சு டும் டும் டும் டும்

கரும்புச் சுவை கசக்கலாச்சு டும் டும் டும் டும்

ஏழைகளின் வறுமை போச்சு டும் டும் டும் டும்

எல்லாமே என் கனவிலாச்சு டும் டும் டும் டும்


Tuesday, June 1, 2010

புத்தம் புதிய விடியல் வரட்டும்


காலை கதிரவன்
கைகளை நீட்ட !
கீழ்த்திசை மெருகேறி
பொன்னென மின்ன !

பொட்டல் காட்டில்
எழுகிற சத்தம்
மிச்சத் துயிலை
தூர விரட்ட!

பச்சைப் பசேலென
புல்லின் பசுமையும்!
புல்நுனி தாங்கிய
பனித்துளி போர்வையும்!
காக்கை குயில் என
பறவைகள் கூட்டம்!
ஓயாது ஒலித்திடும்
மெட்டற்ற பாட்டும்!
மொட்டு வெடிக்கும்
சின்னப் பூவும்-அதை
வட்டமடிக்கும்
சிறு கருவண்டும் !

வீசும் காற்றின்
வீரியம் குறைக்கும் !
நெட்டென வளர்ந்த
மரங்கள் கூட்டம் !
காற்றில் அசையும்
கிளையும் இலையும்!
எழு என அழைக்கும்
சங்கேத மொழியும்!
அவசர வாழ்வில்
அவசிய தருணம்
சுத்தக் காற்றை
சுவாசிக்கும் நிமிடம் !

நித்தம் நித்தம்
வரலாறு படைக்க
சோதனை எல்லாம்
சாதனை ஆக
புத்தம் புதிய
விடியல் வரட்டும்
ஓயாத அலையென
ஊக்கம் இருக்கட்டும்!

தமிழ் தரணியை ஆளும்



தமிழ் இனி மெல்லச் சாகும்
பழைய கூற்று
தமிழ் இனி தரணியை ஆளும்
இது கணினி கூற்று