Wednesday, October 14, 2020

தமிழ்மொழியாம் பாரில் செம்மொழியாம்!!!


தமிழ்மொழியாம் பாரில் செம்மொழியாம் - எங்கள் 

தாய்மொழியாம் அது உயிர்மொழியாம் 

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி 

நல்வழி காட்டிய முதுமொழியாம்!!!


நற்றமிழாம் நாளும் பைந்தமிழாம் - எங்கள் 

முத்தமிழாம் அது செந்தமிழாம் 

சேரர் சோழர் பாண்டியரோடு - பலர் 

சங்கம் வளர்த்த வளத்தமிழாம்!!!


எந்தை மொழி எந்தன் தாயின்மொழி - பல 

விந்தைகள் கொண்ட சிந்தைமொழி  

அறம் பொருள் இன்பம் வீடென மட்கற்கு 

வாழ்வைப் புகட்டிய வாழ்வின்மொழி!!!


தேன்மொழியம் இனி கனிமொழியும் - எங்கள் 

நான்மொழியம் தமிழ் இனமொழியாம் 

நான்மறை குறளை ஈரடியில் தந்து 

வான்புகழ் கொண்ட வழிமொழியாம் 


எந்தமிழாம் எங்கும் நம் தமிழம் - எங்கள் 

தீந்தமிழாம் நல் நனித்தமிழாம் 

கீழடி காட்டிடும் உண்மை உலகுக்கு 

காலம் வென்றெடுத்த வேர்த்தமிழாம்!!!


பண்டைமொழி பண்பாட்டின் மொழி - பல 

அண்டை மொழிகளின் ஆதிமொழி 

கண்டங்கள் தாண்டியே வந்தமொழி - தமிழ் 

சொந்தங்கள் பேசும் அன்பின்மொழி!!!

Friday, November 20, 2015

விந்தை மனிதரே!!!


வெந்ததைத் தின்று - நித்தம்
வேதனைச் சுழலில் சுழன்று
வேடிக்கையாய்
வினோத  செயல்கள் செய்து
சுயநலமாய்
சுருங்கிய உள்ளம் கொண்டு
படைத்தவனுக்கே
பணத்தை காணிக்கையாக்கி
வரங்கள் பல  கேட்கும்
விளங்காத விந்தை மனிதரே!!!

உம்மிடம், தெய்வம் பேச நினைத்தால்
இப்படித்தான் இருக்குமோ???

இருக்கையில் கொடுத்திடு - பிறரை
கெடுப்பதை மறந்திடு
இறக்கையில் வந்திடும்
கொடுத்ததும் கெடுத்ததும்!!!
இதுவே உண்மை -- அதை
உணர்வது மேன்மை!



Wednesday, July 29, 2015

தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!




வங்காளக் கரையோரம் நீ பிறந்தாய் -- ஐயா
வறுமையிலும் வாடாமல் நீ வளர்ந்தாய்!

அக்னிச்சிறகுகள் நீ படைத்தாய் -- ஐயா
அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாய்!

கனவுகள் பல காண நீ அழைத்தாய் -- ஐயா
இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைத்தாய்!

தூங்கிய இந்தியாவை தூக்கிவிட்டாய் -- ஐயா
தூங்கவிடா கனவுகளை காண வைத்தாய்!

பொக்ரானில் அணுகுண்டு நீ வெடித்தாய் -- ஐயா
பாரினில் இந்தியாவை மதிக்க வைத்தாய்!

ஏவுகணை  எய்திடவே தினம் உழைத்தாய் -- ஐயா
எதிரிகளை அதனாலே அடக்கி வைத்தாய்!

என்றுமே எளிமையாய் நீ இருந்தாய் -- ஐயா
எல்லார்க்கும் வழிகாட்டி நீ நடந்தாய்!

விருதுகள் வாங்கி நீ குவித்தாய் -- ஐயா
விளம்பரம் அதைத்தானே நீ தவிர்த்தாய்!

தமிழாலே அமுதுகள் நீ படைத்தாய் -- ஐயா
தன்மானம் பெரிதென்றே  நீ நினைத்தாய்!

ஆசானாய் இருக்கவே ஆசைப்பட்டாய் -- ஐயா
அரங்கத்தில் பேசியே மூச்சை விட்டாய்!

தள்ளாத வயதிலும் ஓய்வறியாய் -- ஐயா
தரணியில் உன் புகழ் நிலைக்குமையா!!!

Saturday, June 28, 2014

உன்னோடு பழகிய நாட்கள்..:)



உன்னோடு பழகிய நாட்கள்
எந்நாளும் மறவேன் கண்மணியே!!
உன் விழிகள் சொன்ன கவிதைகள் - அதில்
புதைந்த ஆயிரம் கற்பனைகள்
உன் மழலைப் பேச்சின் இனிமைகள் - அதன்
வார்தையில் தெரித்த தத்துவங்கள்
உன் கைகள் காட்டிய அதிசயங்கள் - காற்றில்
விரல்கள் தீட்டிய ஓவியங்கள்
உன் கொலுசு பாடிய பாட்டுக்கள் - அதற்கு
கால்கள் ஆடிய நாட்டியங்கள்

ஆதலால்,
பசுமை நிறைந்த உன் நினைவுகளை
எந்நாளும் மறவேன் கண்மணியே!!!!

Thursday, July 4, 2013

நாம் விழித்திட இதுவே நேரம் ஐயா !!!

ஒரு வல்லரசான
இந்தியா காண
ஆவலாய் காத்திருந்தேன்!
எந்தன் நாட்டுப் பட்டுக்கொடி
பாரில் உயர்ந்திட
கனவுகள் கண்டிருந்தேன்!
நான் பேதையன்றோ -  அட
பித்தனன்றோ -நான்
கண்ட கனவினில் நியாயமுண்டோ !!!

என்ன வளமில்லை
எந்தன் திருநாட்டில்
என்றே நானிருந்தேன் - அட
உள்ள வளமெல்லாம்
கொள்ளையடிக்கவே
இன்றே  நானுணர்ந்தேன் !!!

நான் சொல்வதெல்லாம்
அட உண்மையையா  - நம்
அரசாங்கம் ஒரு பொம்மையையா
காலம் இன்னும் உள்ளதையா - நாம்
விழித்திட இதுவே நேரம் ஐயா !!!

Monday, May 28, 2012

நீ ஒரு வரலாறு !!!







மனிதா மனிதா
நீ உன்னை நம்பு
இடியே விழுந்தாலும்
மன உரத்தினை நம்பு !!!

காலைச் சூரியன் கரைந்துவிடாது
மாலைச் சந்திரன் சரிந்துவிடாது
சுற்றும் உலகம் தொலைந்துவிடாது
புதையல் நீ தேடு!!!

கடலலை என்றும் ஓய்வறியாது
வீசும் காற்றும் நின்றுவிடாது
எரிமலை அடங்கி தூங்கிவிடாது
வெடித்து முன்னேறு !!!

காலம் இது காலம்
உன் திறமையை காட்ட
பின்வருமே ஒரு கூட்டம்
நீ வழிகாட்ட !!!

காட்டில் நதிகள் தடையறியாது
வேட்டை நாய்கள் பதுங்கிவிடாது
விதிகள் உன்னை அடக்கிவிடாது
புது விதிகள் நீ கூறு !!!


சிட்டுக்குருவி ஓய்வறியாது
சீறும் பாம்பு பயமறியாது
சரித்திரம் உன்னை மறந்துவிடாது
நீ ஒரு வரலாறு !!!



Friday, December 31, 2010

புத்தாண்டே வருக!!!




புத்தாண்டில் புன்னகை பூத்து,
புது விடியல் பல வண்ணங்கள் காட்ட,
சோதனைகள் சாதனைகளாகி,
வேதனைகள் வெற்றிகளாக,
மண்ணுலகம் வளம் கொழித்து,
மகிழ்ச்சியால் உள்ளம் துள்ள,
மானிடரிடம் வேண்டுவதெல்லாம்,

ஏழ்மையிலும் உயர்ந்த நேர்மை!
செல்வச்செழிப்பிலும் போற்றும் எளிமை!
வெறுமையிலும் நிறைந்த வளமை!
வறுமையிலும் செழிக்கும் செழுமை!
செயலினிலெ என்றும் செரிவு!
துன்பதிலே உறுதியான துணிவு!
பதவியிலே பண்பான பணிவு-பயனற்ற
பழமைக்கு கொடுப்போம் முடிவு!

காலந்தின்னும் பழமையே வழி விடுக!!!
கனவைத் தாங்கிய புத்தாண்டே வருக! வருக!!!